விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர விழா மிக முக்கியமான திருவிழாவாகும். இந்த விழாவின் 9ஆம் திருநாளான இன்று முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
அடிப்பூரம் என்பது ஸ்ரீ ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். இந்த தேரோட்டத்தில் பங்கேற்று ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னாரை தரிசனம் செய்தால், வாழ்வில் எல்லா நலன்களும் பெறலாம் என்பது ஐதீகம். இதற்கு முன்னதாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, திருத்தேரில் எழுந்தருள செய்தனர். தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷத்துடன் தேரை நான்கு ரத வீதிகளின் வழியாக வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
முன்னதாக, தேரோட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஆட்சித் தலைவர் சுகபுத்ரா, மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து விழாவை தொடங்கி வைத்தனர். இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை என்பதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.