திருநெல்வேலி: நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமில்லாமல், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் அனுபவம் வாய்ந்த மருத்துவ பேராசிரியர்கள் பணிபுரிவதால் பலர் கலந்தாய்வில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியை விரும்பி தேர்வு செய்வதுண்டு.
இந்நிலையில் இந்த மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. 2019-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை தொடங்கிய 250 மாணவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இந்நிலையில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு பட்டம் வாங்கிய மாணவ, மாணவிகள் அனைவரும் மேடையில் மொத்தமாக திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சினிமா பாடல்களை ஒலிக்க விட்டு உற்சாகமுடன் நடனமாடினர். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தை குறிக்கும் சினிமா பாடலான ’திருநெல்வேலி அல்வாடா’ என்ற பாடலை ஒலிக்க விட்டு உற்சாக நடனமாடினர்.