தஞ்சாவூர்: தனியார் நிறுவனம் நடத்திய கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கடந்த 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தஞ்சை மேல வீதியில் உள்ள யாதவ கண்ணன் கோயிலில் பூச்சொரிதல் விழா, கோ பூஜை, உரியடி, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. மேலும், நவநீத கிருஷ்ணன் கோயில், கீழவாசல் வேணுகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதேபோன்று தஞ்சாவூரில் தனியார் நிறுவனம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் தஞ்சையை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்.
மேலும் குழந்தைகள் புகைப்படம் எடுப்பதற்காக விதவிதமான செல்பி பாயிண்டும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சிறுவர், சிறுமிகள் அவர்களது பெற்றோருடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.