தஞ்சாவூர்: தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே யார் முன்னே செல்வது என்று தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே யார் முன்னே செல்வது என்று போட்டி போட்டுக் கொண்டு செல்வது என்று வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 20) கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிரந்த இரண்டு தனியார் பேருந்துகள் இடையே முன்னும் பின்னும் செல்லும் போது அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தஞ்சை சரபோஜி கல்லூரி பகுதியில் தனியார் மருத்துவமனை அருகில் செல்லும் போது அந்த இரு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பஸ்சை நடுவழியிலேயே நிறுத்தி விட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். பின்னர், அக்கம்பக்கத்தினர் வந்து அவர்களை சமாதானப்படுத்தியதும் பேருந்தை எடுத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் பேருந்துகளில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். பேருந்து ஓட்டுநர்கள் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.