Surprise Me!

நிரம்பி வழிந்த பழனி கோயில் உண்டியல்... ரூ.3 கோடியை தாண்டிய காணிக்கை!

2025-08-21 7 Dailymotion

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.40 கோடியைத் தாண்டியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், கோயிலில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நிரம்பி வழிந்தன.

அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. அதில், 3 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 207 ரூபாய் கிடைத்துள்ளதாகவும், இது 33 நாள் காணிக்கை எனவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

காணிக்கை விவரம்

உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அந்த வகையில், தங்கம் 627 கிராமும், வெள்ளி 18 ஆயிரத்து 80 கிராமும் கிடைத்துள்ளது.

அதே போல, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மார் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 2,114-ம், பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 

இந்த பணியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.