கோயம்புத்தூர்: வால்பாறை அருகே சாலக்குடி சாலையில் தும்பிக்கை இல்லாத குட்டி யானையை அழைத்துச் சென்ற யானை கூட்டத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானை கூட்டத்தின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதிலும் சாலக்குடி செல்லும் சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாகும். மூங்கில்கள் அதிகம் உள்ளதால் அதிக அளவில் காட்டு யானைக் கூட்டங்கள் சாலையோரம் தென்படுகின்றன. பெரியார் புலிகள் காப்பகம் வனப் பகுதி என்பதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. வால்பாறையில் இருந்து சாலக்குடி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சாலக்குடி செல்லும் சாலையில் காட்டு யாணை கூட்டம் சாலையை கடந்து சென்றது. அதிலும் மூன்று வயது உள்ள தும்பிக்கை இல்லா குட்டியானையும் இருந்தது. அந்த குட்டி யானையை காட்டு யானை கூட்டங்கள் பாதுகாப்பாக சாலையில் அரவணைத்து வனப்பகுதிக்குள் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டு யானை கூட்டங்கள் வனப் பகுதியை விட்டு வெளியே சாலை கடந்து செல்கிறது.
இது குறித்து மளுக்குபாறை பகுதி சேர்ந்த சமூக ஆர்வலர் விஜயன் கூறுகையில், "இந்ந தும்பிக்கை இல்லா குட்டியானை பார்ப்பது மிகவும் அரிதானது. அவ்வளவு எளிதாக வனப்பகுதி விட்டு இந்த குட்டி யானை கூட்டம் வருவதில்லை. கேரளா வனத்துறையினர் தொடர்ந்து இந்த யானையை கண்காணித்து வருகின்றனர்" என தெரிவித்தார்.