வேலூர்: இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் சிக்கிய தம்பதியை பொதுமக்கள் மீட்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் ஆக.22ம் தேதி விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, பொன்னை பகுதியில் உள்ள ஏரி நிரம்பியுள்ளது. இதனால், ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், கால்வாயின் மேல் அமைக்கப்பட்டுள்ள பாதையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், புதூர் பகுதியை சேர்ந்த மதன்குமார், அவரது மனைவி இருவரும் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது, நீரின் ஓட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக், கீழே வழுக்கி விழுந்துள்ளது. அதனைக் கண்ட அப்பகுதியில் மக்கள் விரைந்து சென்று, இருவரையும் காப்பாற்றியுள்ளனர். அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்களின் இந்த துரித செயலால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தம்பதியினரை பொதுமக்கள் மீட்கும் வீடியோ தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதுபோன்ற மழைக்காலங்களில் மக்கள் கவனமாக செல்ல வேண்டும் என தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நீரில் மூழ்கிய பாதைகளில் எச்சரிக்கை பலகைகளை காவல்துறை வைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.