Surprise Me!

தூத்துக்குடியை மிரள வைத்த 'ஆபரேஷன் சிந்தூர்' விநாயகர்!

2025-08-27 4 Dailymotion

தூத்துக்குடி: 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியை நினைவுக்கூரும் வகையில், தூத்துக்குடியில் வைக்கப்பட்ட ராணுவ விநாயகர் சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் துல்லிய தாக்குதலை நடத்தியது.

நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை பலிகொண்ட இந்த தாக்குதலுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு குவிந்தது. இந்நிலையில், சிந்தூர் ஆபரேஷனை நினைவுகூரும் விதமாக, தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ராணுவ உடையுடனும், கையில் துப்பாக்கியுடனும் நிற்கும் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இங்கு அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் அனைத்தும் மும்பையில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றன. அதே போல், இங்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அனைத்தும், அந்தந்த காலகட்டங்களில் மிகவும் பிரபலமாக பேசப்படும் சம்பவங்களை மையமாக வைத்து வடிவமைக்கப்படும்.

அந்த வகையில், இன்று இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை, ராணுவ உடையுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், நான்கு கைகள் வைக்கப்பட்டு இரண்டு கைகளில் துப்பாக்கியை பிடித்தபடியும், பின்னால் உள்ள இரண்டு கைகளில் தேசியகொடியை பிடித்தபடியும் கம்பீரமாக உள்ளது. அத்துடன்,  விநாயகர் சிலைக்கு ராணுவ தொப்பி அணிந்தபடி காட்சியளிப்பதால் அனைவரும் சிலையை ரசித்தபடி செல்கின்றனர்.