கோயம்புத்தூர்: இந்து முன்னணி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களால் செல்வ விநாயகர் சிலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்துக்களின் முதன்முதல் கடவுளாக இருப்பவர் விநாயகர். அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. கோவையிலும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ரத்தினபுரி பகுதியில் இந்து முன்னணி சார்பில் செல்வ விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சமாக விநாயகர் சிலையை சுற்றி ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பிலான ரூ.10 முதல் ரூ.200 வரையிலான ரூபாய் நோட்டுகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலையை அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.