கோயம்புத்தூர்: வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்கள் வீடுகளை யானைகள் கூட்டமாக வந்து சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தனியார் எஸ்டேட் பகுதிகளில், காட்டு யானைகள் அதிகளவில் தென்படுகிறது. குறிப்பாக, கேரளா வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த யானைகள் புதுத்தோட்டம், ரொட்டிக்கடை, சோலையார் அணை, சின்னக்கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் உலா வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளையும், பொருட்களையும் சேதப்படுத்துகிறது.
இந்நிலையில், கெஜ முடி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள், கெஜ முடி பகுதியிலுள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதமாக்கியுள்ளது. அதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் அருகே இருக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து, வனத்துறைக்கு தகவலளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், யானை கூட்டத்தை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "வால்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, யானையின் நடமாட்டத்தை சுழற்சி முறையில் கண்காணித்து வருகிறோம். வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வெளியே செல்லக்கூடாது. எஸ்டேட் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வேண்டும். ஒருவேளை யானைகளை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும்" என்றும் தெரிவித்தனர்.