Surprise Me!

எம்மாடி எவ்வளவு பெரிய கரடி... அம்பாசமுத்திரம் அருகே கண்ட காட்சி; வைலாகும் வீடியோ!

2025-08-28 7 Dailymotion

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிதளில் சுற்றி திரியும் கரடியால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

அம்பாசமுத்திரம், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட மலை அடிவார கிராமங்களில் அண்மைக்காலமாக இரவு நேரங்களில் தினமும் கரடிகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவது வாடிக்கையாகி விட்டது. கரடிகள் சாலைகளில் நடந்து செல்வது, கோயில் வளாகத்தில் சுற்றி திரிவது போன்ற காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இவ்வாறு சுற்றித்திரியும் கரடிகள், மனிதர்களையும் அவ்வப்போது தாக்குவதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. 

இந்நிலையில், மணிமுத்தாறு அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி பட்டாளத்தான் சுடலை மாடசாமி கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு, ராட்சத கரடி ஒன்று சுற்றி திரிந்தது. பின்னர் அந்தக் கோயில் சுவரில் ஏறி குதித்த கரடி, காட்டுக்குள் ஓடி மறைந்ததது. இதனை அப்பகுதியினர் வீடியோ எடுத்த நிலையில், தற்போது அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அங்கிருந்த பெண்கள், 'எம்மாடி எவ்வளவு பெரிய கரடி' என்று பிரமிப்போடு பேசும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுவரை அப்பகுதி மக்கள் பார்த்திராத வகையில் மிகப்பெரிய கரடி என்பதால் அதனை கண்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, அம்பாசமுத்திரம் வனத்துறை துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் நேற்றிரவு வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் கரடி நடமாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கும் அவர்கள் விழிப்புணர்வு அளித்தனர். அதே போல், இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.