நாகப்பட்டினம்: பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் பேராலயத்தில் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பாத யாத்திரையாக பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், இந்தியாவின் “லூர்து” என்று அழைக்கப்படுகிறது. ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், கல்வி, செல்வம் எனப் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் வேண்டுதலை முன்வைத்து ஆண்டுதோறும் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இதையடுத்து நாளை 29 ஆம் தேதி நடைபெறும் கொடியேற்றத்தில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்சி, சென்னை, மதுரை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வேளாங்கண்ணி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி தஞ்சையிலிருந்து புறப்பட்ட பக்தர்கள் அம்மாபேட்டை, நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாருர் , நாகை வழியாக சுமார் 100 கி.மீட்டர் பயணம் செய்து வேளாங்கண்ணி ஆலயத்தை சென்றடைந்து மாதாவை வழிபடுகின்றனர்.
செல்லும் வழியெங்கும் 'மரியே வாழ்க மரியே வாழ்க' பக்தி பாடல்களை பாடிய படி அவர்கள் நடைபயணத்தை மேற்கொண்டனர். வழியில் களைப்பு தெரியாமல் இருக்க ஏதுவாக பாடல்கள் பாடிய படியும் கும்மி அடித்தும், மரத்தின் நிழலில் இளைப்பாரியும் வருகின்றனர். கொடி ஏற்றத்துடன் தொடங்கும் திருவிழா, 11 நாட்கள் நடைபெறும் நிலையில் திருப்பலிகள் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் பங்கு கொண்டு தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர்.