தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தையில் ஜெயராம், ராசாத்தி தம்பதியின் மகள் மதி ராகிணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ராசாத்தியின் சகோதரர்கள் தங்களது மருமகளின் மஞ்சள் நீராட்டு விழாவில், தாய்மாமன் முறையை சிறப்பாக செய்ய வேண்டும் என எண்ணி திருவிழா போன்று வெகு சிறப்பாக சீர் வரிசை கொண்டு வந்தனர்.
பட்டுச் சேலைகள், தங்க நகைகள், வளையல், அண்டா, பாத்திரங்கள், இனிப்புகள், பழங்களான, மா, பலா, வாழை, மாதுளை, உள்ளிட்ட பழ வகைகளுடன் அனைத்து வகை மிட்டாய்கள், பூக்கள், அரிசி மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 101 வகைகளில் சீர்வரிசை, மற்றும் 12 அண்டா, 4 குத்து விளக்குகள், ஆறு ஆடுகள் என நான்கு வாகனங்களில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் மேளதாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து மருமகளுக்கு சீர் செய்து அசத்தினர்.
இவற்றை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். பின்னர், ராசாத்தியின் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு ஆடிப்பாடி உற்சாகத்துடன், சீர்வரிசை கொண்டு சென்று அச்சிறுமியை ஆசீர்வாதம் செய்தனர். இது குறித்து, ராசாத்தி தாய் சுதா கூறுகையில், ”எனது பேத்திக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. 101 வகைகளில் சீர்வரிசை பொருட்கள் நான்கு வாகனங்களில் கொண்டு சென்றோம். மூன்று பவுன் தங்க செயின், ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய், 6 ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை 11 தாய் மாமன்கள் சேர்ந்து செய்தனர்” என்றார்.