காஞ்சிபுரம்: கீழம்பி ஊராட்சியில் உள்ள குளத்தினை தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சுத்தம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழைக்காலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், வனப்பாதுகாப்பு, நீர்நிலைகளில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நிகழ்வானது இன்று (ஆக.30) தொடங்கப்பட்டது.
அந்த வகையில், கீழம்பி ஊராட்சியில் உள்ள குண்டுமணி குளம் தூய்மைப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில், கீழம்பி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், கீழம்பி ஊராட்சிமன்றத் தலைவர் மகாலட்சுமி ராஜசேகர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.