காஞ்சிபுரம்: இந்து முன்னணி சார்பில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த 4 நாட்களாக பூஜை செய்து வந்த விநாயகர் சிலைகளை கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைந்து வருகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி சார்பில், வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பொதுமக்கள் தரிசனம் செய்து வந்த நிலையில், நான்காம் நாளான நேற்று (ஆக.30) விஜர்சனம் செய்வதற்காக 100-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் நடந்த இந்த ஊர்வலம் மேட்டு தெரு, மார்க்கெட், பஜார் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக பேண்ட் வாத்தியங்கள், வண்ண வெடி வெடித்து ஆராவரமாக கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக விநாயகர் சிலைகள் அனைத்தும், வாகனம் மூலமாக சென்னை மெரினா கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, விஜர்சனம் செய்யப்பட்டது.
இந்த ஊர்வலத்தின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.