தூத்துக்குடி: இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு மீதான ஆர்வம் அதிகரிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஒரு பகுதியாக தூத்துக்குடி வ.உ.சி சிதம்பரனார் துறைமுகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் துறைமுக ஆணையத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகள், ஊழியர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். பெண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், ஆண்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் நடத்தப்பட்டது. பழைய துறைமுகத்திலிருந்து தொடங்கி தெர்மல் ரவுண்டான வரை சைக்கிள் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இந்த சைக்கிள் போட்டியை துறைமுக ஆணைய தலைவர் சுசந்த குமார் புரோஹித் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை 4 மணி முதலே வேனில் சைக்கிளை ஏற்றிக்கொண்டு போட்டி நடைபெறும் இடத்துக்கு வந்தனர். காலை 7.00 மணிக்கு இந்த போட்டி தொடங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தவருக்கு ரூ.10,000 ரொக்க பரிசும், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு ரூ.7,000, மூன்றாவது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து 4 முதல் 10வது இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டது. நிகழ்ச்சி காலை 6.00 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தாமதமாக தொடங்கியது. அதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டதாக பெற்றோர்கள் தரப்பில் கூறப்பட்டது.