Surprise Me!

நள்ளிரவில் 80 அடி உள்வாங்கிய கடல்... வெளியே தெரிந்த பாறைகள்: விடாமல் செல்பி எடுத்த பக்தர்கள்!

2025-08-31 4 Dailymotion

தூத்துக்குடி:  திருசெந்தூர் கோயிலில் நள்ளிரவு நேரத்தில் 80 அடி தூரம் கடல் உள்வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்றது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில். இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விடுமுறை தினம், திருவிழா நாட்களில் பக்தர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தருவார்கள். அதைப்போல வெளி மாநிலங்களில் இருந்தும் முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் வருவார்கள். 

இந்நிலையில், கோயில் முன்புள்ள கடல் அவ்வப்போது சீற்றத்துடனும் காணப்படும். அதுமட்டுமல்லாமல் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கியும் காணப்படும். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு 80 அடி கடல் உள்வாங்கியது.

கடல் உள்வாங்கியதால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அதேபோல் கடல் உள்வாங்கி காணப்படுவதால் கடல் பகுதி நீரின்றி குளம் போல அமைதியாக காட்சியளித்தது. இதனிடையே, வெளியே தெரிந்த பாறைகளில் நின்று பக்தர்கள் சிலர் அச்சமின்றி புகைப்படம் எடுத்தனர். பக்தர்கள் பாதுகாப்பை கருதில் கொண்டு பாதுகாப்பு பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.