ஈரோடு: ஆசனூர் அருகே ஓடும் வாகனத்தில் தொங்கியபடி கரும்பை தேடிய யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் பகல், மற்றும் இரவு நேரங்களில் நடமாடுகின்றன. மேலும், வனப்பகுதி வழியாக செல்லும் சரக்கு லாரிகளில், காய்கறி மற்றும் கரும்புகள் இருக்கிறதா? என நுகர்ந்தபடி வாகனங்களை வழி மறிக்கின்றன.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து மினி சரக்கு வாகனம் ஒன்று சத்தியமங்கலம் செல்வதற்காக ஆசனூர் வனப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நடமாடிய ஒரு காட்டு யானை சரக்கு வாகனத்தை வழிமறித்து வாகனத்தின் மீது இரண்டு கால்களை வைத்து தொங்கியபடி கரும்புகள் உள்ளதா? என தும்பிக்கையால் தேடியது.
இருப்பினும் வாகனம் நகர்ந்தபோதும் விடாமல் தொங்கியதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாகனத்தை ஓட்டுநர் நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி யானையிடமிருந்து அவர் தப்பி சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த காட்சியை காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளார். காட்டு யானைகள் தொடர்ச்சியாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறிப்பதால் அவ்வழியாக செல்லும் பயணிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.