நீலகிரி: கூடலூர் நகரப் பகுதியில் உணவு தேடி நடந்து சென்ற காட்டு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதிகளால் நிறைந்து காணப்படுகிறது. அங்கு, யானை, கரடி, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு விலங்குகள் குடியிருப்பில் நோக்கிப் படையெடுத்து வருகின்றன. குறிப்பாக, கூடலூர் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படி வரும் யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அங்குள்ள வாழை, பலாப்பழங்களை உண்பதுடன் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி செல்கின்றன.
இந்நிலையில் காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை கூடலூர் நகரப் பகுதிக்குள் உலா வந்தது. இரவு நேரத்தில் சத்தமின்றி, சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து வந்த யானையைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், யானை நடந்து செல்வதை அப்பகுதியைச் சேர்ந்த பலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி, கூடலூர் பகுதி மக்களை அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜு கூறுகையில், "கூடலூரில் நாளுக்கு நாள் யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கூடலூரில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒருவித அச்சத்திலேயே உள்ளோம். வனக் காவலர்கள் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "வனப்பகுதியில் இருந்து யானைகள் நகரப் பகுதியில் வருவதை தற்போது ட்ரோன் கேமராக்கள் கொண்டு கண்காணித்து வருகிறோம். இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வனப் பணியாளர்கள் பல குழுக்களாக பிரிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்" என தெரிவித்தனர்.