திருச்சி: இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு வருகை புரிந்துள்ளார். இன்று சென்னையில் நிகழ்ச்சியை முடித்து விட்டு, நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, திருச்சி வருகிறார். திருச்சியில் கொள்ளிட கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்கி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நாளை மாலை தரிசனம் மேற்கொள்ள வருகை தருகிறார். இதனால் ஸ்ரீரங்கம் கோயிலில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் பகுதிகளில் சுற்றித் திரியும் யாசகர்களை முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கா கோபுரம் அருகில் இருக்கக் கூடிய மண்டபத்தில், படுத்து உறங்கிய முதியவர் ஒருவரை காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது முதியவருக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த இரண்டு காவலர்கள் முதியவரை தாக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.