தருமபுரி: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களை கை கால்களை அமுக்கி விட சொல்லும் வீடியோ காட்சி தற்போது இணைத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அக்கிராமத்தை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கலைவாணி. தினமும் தலைமையாசிரியர் கலைவாணி பள்ளி நேரத்தில் மேசையின் மீது படுத்துக்கொண்டு பள்ளி மாணவ,மாணவிகளை கை, கால்களை அழுத்தி விட வற்புறுத்துவார் என கூறப்படுகிறது. மாணவர்கள் ஆசிரியைக்கு கால் அழுத்திவிடும் போது சிலர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள், வட்டாச்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் சத்தியபிரியா ஆகியோர் அப்பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
கை, கால்களை அமுக்கி விட சொல்லும் பள்ளி ஆசிரியர் கலைவாணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தலைமை ஆசிரியர் கலைவாணி அப்பியம்பட்டி தொடக்கப்பள்ளிக்கு பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.