தஞ்சாவூர்: நவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சியை உதவி ஆட்சியர் கார்த்திக் ராஜா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் நவராத்திரி பண்டிகை வரும் 22 ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டும், பொதுமக்கள் நவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் கொலு பொம்மை கண்காட்சி நடத்த தஞ்சை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் பொம்மைகள் ஒரே இடத்தில் வரவழைத்து காட்சிப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திக் ராஜா, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சக்திதேவி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் கொலுப்படி செட், வேதமூர்த்திகள், அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், தசாவதாரம் செட், அஷ்டலட்சுமி செட், விநாயகர் செட், தசரா செட், வைகுண்டம் செட் போன்ற கொலு பொம்மைகள் மற்றும் ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பொம்மைகள் இக்கண்காட்சி மற்றும் விற்பனையில் இடம் பெற்றுள்ளன.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி மூலம் ரூ 20 லட்சம் விற்பனை இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு கொலு பொம்மைகளை வாங்கிச் சென்றனர்.