Surprise Me!

சென்னையில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மணல் லாரி!

2025-09-04 4 Dailymotion

சென்னை: சென்னையை அடுத்த அயப்பாக்கத்தில் மணல் ஏற்றி சென்ற லாரி ஒன்று, சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த வீர விஜயன் (35), திருவள்ளூரில் இருந்து திருவேற்காட்டுக்கு டிப்பர் லாரியில் 'எம் சாண்ட்' ஏற்றி சென்று கொண்டிருந்தார். அப்போது அயப்பாக்கம் சுந்தர சோழபுரம் ஏரிக்கரை சாலையில் செல்லும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்குள்ள ஏரியை ஒட்டி இருந்த 10 அடி பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.  

சாலை மிக குறுகலாகவும், சேதமடைந்தும் உள்ளதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லாரி ஓட்டுநரான விஜயனும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 

இந்நிலையில், லாரி கவிழ்ந்து கிடப்பதை பார்த்துக் கொண்டே சென்ற ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் ஒன்றும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து சம்பவங்கள் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பருத்திப்பட்டு கோலடி சாலை, சுந்தர சோழபுரம் ஏரிக்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மோசமாக சேதம் அடைந்திருப்பதால் நாள்தோறும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.