தேனி: தமிழ்நாடு, கேரள எல்லையை இணைக்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையின் சிறப்பம்சங்களின் ஒன்றான வண்ண வண்ண பூக்களால் வடிவமைக்கப்பட்ட கோலத்தின் நடுவில் மாவேலி மன்னனின் உருவமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு சேர்க்கப்பட்டிருந்தது.
மேலும் கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய "முண்டு சேலை" அணிந்து கொண்டு விழாவில் பங்கேற்றனர். கேரள பண்பாட்டை பிரதிபலிக்கும் "செண்டை மேளங்கள்" முழங்க, கேரள கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வண்ண வண்ண முகப்பூச்சுடன் அபிநயங்கள் கலந்த கதகளியும், நடுவில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சுற்றிலும் கை கொட்டி ஆடும் "திருவாதிரை களி" நடனமும் ஆடி மாணவியர் அசத்தினர்.
மாணவியரில் பெரும்பாலானோர் மாவேலி மன்னன் வேடமணிந்து பங்கேற்றனர். மாவேலி மன்னனை வெண்கொற்றக் குடையின் கீழ் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் மாணவியர் அழைத்து வந்தனர். மேலும் மாணவிகளுக்கு அத்தை பூ கோலமிட்டு, உரியடித்தல் போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்று சிறப்பு செய்த மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது.