Surprise Me!

எஸ்கியூஸ்மி சாப்ட எதாவது இருக்குமா.. உணவை தேடி வீட்டு மாடிப்படி ஏறி வந்த காட்டெருமை!

2025-09-04 1 Dailymotion

திண்டுக்கல்: உணவு தேடி வீட்டின் மாடிப் படி ஏறி வந்த ஒற்றை காட்டெருமையால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலாவுவதும், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, காட்டெருமைகள் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இன்று (செப்.4) காலை கான்வென்ட் ரோடு குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமை ஒன்று உணவு தேடி மாடி வீட்டின் படிக்கட்டுகளில் ஏறி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

கொடைக்கானல் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக இருப்பதால், இது போன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டெருமைகள் நகர்ப் பகுதிகளில் உலாவுவது மட்டுமல்லாமல், வீடுகளுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வன விலங்குகளின் அத்துமீறலால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, வன விலங்குகளை கட்டுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.