வேலூர்: நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபி திருநாளை முன்னிட்டு 4,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இஸ்லாத்தின் கடைசி தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மீலாடி நபியாக கொண்டாடப்பட்டுகிறது. இந்த நன்நாளில், இஸ்லாமியர்கள் தங்களின் ஒற்றுமையை நிலைநாட்டும் விதமாக பல்வேறு நல்ல காரியங்களில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில், இஸ்லாமியர்களின் மனித நேயம், அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக வேலூர் மாவட்டம் சார்பனாமேடு பகுதியில் அன்னாதான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில், சாதி-மத பேதமின்றி 4,000- க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அனைவரும் மன நிறைவுடன் அன்னதான உணவை பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து, மிலாது நபி அன்னதான விழா குழுவினர் கூறுகையில், “நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை ஒற்றுமையுடன் கொண்டாடுவதே எங்கள் நோக்கம். ஆண்டுதோறும் அன்னதானம் வழங்குவது போன்று இந்த ஆண்டும் 1500 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து, சாதி-மத பேதமின்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கியுள்ளோம். நபிகள் நாயகத்தின் உண்மையான போதனையை அனைவருக்கும் உணர்த்துவதே இந்த விழாவின் நோக்கம்” என்று தெரிவித்தனர்.